லாக் டவுன் நீக்கப்பட்ட பின்னர் சுமார் 54 சதவீத நிறுவனங்கள் தங்கள் துறைகளில் வேலையிழப்பு ஏற்படுமென எதிர்பார்க்கின்றன, என்று சிஐஐ தலைமை நிர்வாக அதிகாரிகள் நடத்திய உடனடி வாக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர். ‘கோவிட்-19: பொருளாதாரம் மற்றும் தொழில்துறையில் தாக்கம்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பங்கேற்பாளர்களில் 45 சதவீதம் பேர், 15 முதல் 30 சதவீதம் வரை வேலை வாய்ப்புகளைக் குறைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். எவ்வாறாயினும், கவலைகளைப் பெரிதுபடுத்தாமல் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் இதுவரை தங்கள் நிறுவனங்களில் சம்பளம்/ஊதிய குறைப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். இந்த ஆய்வில் 300க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு எம்.எஸ்.எம்.இ (குறு, சிறு தொழில் நிறுவனங்கள்). நடப்பு காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2020) வருவாய் 40 சதவீதத்திற்கும் மேலாகக் குறையுமென்று 65 சதவீத நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், 2020-21 நிதியாண்டில், வருவாய் வீழ்ச்சி எதிர்பார்ப்புகள் தடுமாற்றத்தை தருகிறது. சுமார் 33 சதவீத நிறுவனங்கள், 40 சதவீதத்திற்கும் அதிகமாக வருவாயில் வீழ்ச்சியை எதிர்பார்க்கின்றன; மேலும், 32 சதவீத நிறுவனங்கள், 20 முதல் 40 சதவீதம். வரையிலான அளவில் வருவாய் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கின்றனர். "கொரோனா வைரஸின் தாக்கம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க லாக் டவுன் அவசியமாக இருந்தபோதிலும், பொருளாதார நடவடிக்கையில் இது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில்,பொருளாதாரம் புத்துயிர் பெறவும் மற்றும் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளவும், சரியான தருணத்தில் லாக் டவுனிலிருந்து வெளியேறவும், ஒரு நிதி தொகுப்புக்காகத் பல நிறுவனங்கள் காத்திருக்கிறது," என்று சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி கூறியுள்ளார். லாக் டவுனுக்குப் பிறகு பொருளாதாரம் இயல்புநிலைக்குத் திரும்ப, ஒரு வருடத்திற்கும் மேலாகுமென்று 45 சதவீதம் பேர் கருதுகின்றனர். இருப்பினும், தங்கள் சொந்த நிறுவனங்களைப் பொறுத்தவரை, சற்று விரைவாக அதாவது 6-12 மாதங்களுக்குள் மீட்பை எதிர்பார்க்கிறார்கள்; பொதுவாக 34 சதவீதம் பேர் இதேக் கருத்தை எதிரொலிக்கிறார்கள்.
Translated by Pravindran