உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் ஒரு வேலையைப் பெறுவது நிச்சயம் சுலபமான விஷயம் அல்ல. வேலைக்கு விண்ணப்பிப்போர் 12 சுற்றுக்கள் வரை செல்ல வேண்டும்.

 

இவ்வளவு குதிரை கொம்பான வேலையில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஒரு முறை வேலைக்கு சேர்பவர் அவர் விரும்பும் வரை அந்த வேலையில் நீடிக்க முடியும்.

 

ஏனென்றால், 58 அல்லது 60 வயதில் தங்கள் ஊழியர்களை ஓய்வு நீக்கம் செய்யும் பெரும்பாலான அமைப்புகளைப் போலல்லாமல், அமேசான் இந்தியா அதன் ஊழியர்களுக்கு ஓய்வூதிய வயதை நிர்ணயிக்கவில்லை.

 

மேலும், அமேசான் இந்தியா பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் குறித்து சில சுவாரஸ்யமான முயற்சிகளைக் கொண்டுள்ளது.

 

எனவே, நீங்கள் ஒரு பெண் அல்லது உடல் இயலாமை உள்ளவர் (PWD) அல்லது LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர் அல்லது முன்கூட்டியே இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவராக இருந்து கார்பொரேட் துறையில் கோலோச்ச விரும்பினால், அமேசானின் எந்த வேலை காலியிடங்களுக்கும் நீங்கள் தகுதி பெற்றவர் ஆவீர்கள்.

 

 

அமேசான் தற்போது நாட்டில் 62,000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது. அதன் இந்தியா வேலை இணையதளத்தில் பெங்களூருக்கு மட்டும் நிதி ஆய்வாளர், தர உத்தரவாத பொறியாளர், HR எனப்படும் மனிதவள நிர்வாகம், தயாரிப்பு வடிவமைப்பாளர், மூத்த வணிக ஆய்வாளர் , மற்றும் மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர் என 1,367 வேலை பட்டியல்கள் உள்ளன. இந்த போர்ட்டலில் டெல்லிக்கு 43, சென்னைக்கு 295, மும்பைக்கு 119 வேலைவாய்ப்பு பட்டியல்கள் இருந்தன.

 

"அமேசான் இந்தியாவில் எனது குறிக்கோள் எங்கள் வாடிக்கையாளர் தளத்தைப் போலவே வேறுபட்ட ஒரு பணியாளர் தளத்தைக் கொண்டிருக்க வேண்டும்," என்று அமேசானில் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு இயக்குனர் மனிதவள இயக்குனர் தீப்தி வர்மா பிசினஸ்லைனிடம் தெரிவித்தார். உலகளவில் அமேசானின் பணியாளர்களில் 40 சதவீதம் பெண்கள், அந்த போக்கு இந்தியாவில் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

 

 

பன்முகத்தன்மை முயற்சிகள்

 

 

“நாங்கள் நிறைய PWD -களை வேலைக்கு அமர்த்தியுள்ளோம் - செவிப்புலன் மற்றும் பேச்சு குறைபாடுகள் உள்ளவர்களால் முற்றிலும் நிர்வகிக்கப்படும் ‘  சைலண்ட் டெலிவரி ஸ்டேஷனுக்கு’ நாங்கள் முன்னோடியாக இருந்தோம், இரண்டாவதாக எங்கள் கூட்டாளருடன் மும்பையில் திறந்தோம். இந்த இரண்டு நிலையங்களும் இதுபோன்ற 30 க்கும் மேற்பட்ட விநியோக கூட்டாளர்களைப் பயன்படுத்துகின்றன. LGBTQ-வுக்கான எங்கள் உறவுக் குழுவான கிளாமாசோன், அனைத்து ஊழியர்களுக்கும் மறைவை விட்டு வெளியே வர ஊக்கம் அளிக்கிறது. அமேசானில் பல்வேறு நிலைகளில் இரட்டை இலக்க எண்களில் திருநங்கைகளை பணியில் அமர்த்தியுள்ளோம்.”

 

"முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்குத் தெரிவுசெய்யும் இந்திய இராணுவத்தின் அதிகாரி பணியாளர்களுக்கான ஒரு திட்டமும் எங்களிடம் உள்ளது, இது யுத்த வளையத்தில் இருந்து கார்ப்பரேட் மண்டலத்திற்கு மாறுவதற்கு உதவுகிறது."

 

தற்போது, அமேசான் ‘ரிகிண்டில் 2.0’ ஐ மீண்டும் துவக்கியுள்ளது. இது திருமணம், மகப்பேறு போன்ற இடைவெளிகளில் இருந்து மீண்டும் வேலைக்கு வரும் பெண்களுக்கு அவர்களின் நிறுவன வாழ்க்கையை புதுப்பிக்கவும், கட்டமைக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 2017-ல் முதன்முதலில் தொடங்கப்பட்டது, பெண்கள் தங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்த உதவுவதில் இந்த திட்டம் வெற்றிகரமாக இல்லை.

 

இந்த திட்டம் சென்னை மற்றும் ஹைதராபாத் வரை விரிவுபடுத்தப்பட்டு, அதன் வெற்றியைப் பொறுத்து மற்ற நகரங்களில் தொடங்கப்படும்.

 

"இந்த திட்டம் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் வேறு பாத்திரங்களில் தொடங்கப்படுகிறது. அங்கு இந்த பெண்கள் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு பணிபுரிவார்கள், பின்னர் முழுநேர ஊழியராக மாறுவதற்கும் இது உதவும்," என்று வர்மா கூறினார்.

 

 

Translated by Gayathri G