தள்ளுபடி , மாபெரும் தள்ளுபடி!! இது ஏதோ நம்ம ஊரு ஆடி மாத ஜவுளிக்கடை விளம்பரம்னு நினைக்காதீங்க. துருக்கி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் வெங்காயம் தான். கிலோ வெறும் பத்தே ரூபாய்!!!!

சில மாதங்களுக்கு முன் மக்கள் கண்களில் கண்ணீர் வரவழைத்த வெங்காயம் இப்போது அரசு நிறுவனங்கள் கண்களில் நீர் வரவைத்துள்ளது.

எம்எம்டிசி (MMTC) தான் நாஃபெட் (தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு- Nafed) உடன் இணைந்து இந்த அதிரடி விற்பனையைத் தொடங்கி உள்ளது.

 

குறைந்த விலை விற்பனை

பிசினஸ்லைன் நடத்திய விசாரணையில், இந்த இரண்டு மத்திய அரசு நிறுவனங்களும் மஞ்சள் வெங்காயத்தை கிலோ பத்து ரூபாய் என்ற மொத்த விலையில் மாநில அரசுகளுக்கும், ஜே.என்.பி.டி மற்றும் மும்பை துறைமுகத்திற்கு அருகிலுள்ள இருப்புப் பகுதிகளில் உள்ள பிற விற்பனையாளர்களுக்கும் வழங்குகின்றன என்பது தெரிய வந்துள்ளது.

 

கடந்த சனிக்கிழமை அன்று, மகாராஷ்டிராவின் லாசல்கான் வெங்காய சந்தையில் மொத்த விலை குவிண்டால் (100 கிலோ) ஒன்றுக்கு 1,780 ரூபாய், அதாவது ஒரு கிலோவுக்கு ரூபாய் 17.80 ஆக இருந்தது.

 

பிப்ரவரி 5 ஆம் தேதி, எம்எம்டிசி 375 டன் துருக்கிய வெங்காயத்தை ‘உள்ளது உள்ளபடி’ அடிப்படையில் விற்க முடிவு செய்தது. இதன் பொருள்: விற்பனையாளர் உற்பத்தியின் தரத்திற்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. ஜே.என்.பி.டி துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஒரு கொள்கலன் சரக்கு நிலையத்தில் (Container Freight Station-CFS) பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 5.30 மணி வரை ஏலதாரர்கள் தங்கள் ஏலங்களை தெரிவிக்குமாறு எம்.எம்.டி.சி கேட்டுக் கொண்டுள்ளது.

 

எம்.எம்.டி.சி சார்பாக நாஃபெட் இந்த விற்பனையை செய்து வருகிறது.

 

மாநில அரசுக்காக இவ்விரண்டு துறைமுகங்களுக்கு அருகிலுள்ள சி.எஃப்.எஸ்ஸில் 10,000 டன் துருக்கிய வெங்காயம் கிடைப்பதாக ஒரு நாஃபெட் அதிகாரி பிசினஸ்லைனிடம் தெரிவித்தார். எம்.எம்.டி.சி மத்திய அரசு சார்பாக வெங்காயத்தை வாங்கியிருந்தது. இந்த சரக்கு கடந்த 30 நாட்களில் அல்லது அதற்கு முந்தைய காலத்தில் வந்தது.

 

விலை உயர்வு

கடந்த ஆண்டு அதிகப்படியான பருவமழை பெய்து, மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் வெங்காய பயிரை அழித்தது. இதனால் வருகை குறையும் என்ற அச்சத்தில் விலை அதிகரிக்கத் தொடங்கின.

 

ஆகஸ்ட் 14 க்குப் பிறகு, மாதிரி விலைகள் அதிகரிக்கத் தொடங்கின, டிசம்பர் 16 ஆம் தேதிக்குள் இது ஒரு குவிண்டால் ரூபாய் 8,625 ஐ எட்டியது. அதே நேரத்தில் மும்பை மற்றும் டெல்லி போன்ற முக்கிய சில்லறை சந்தைகளில் விலை ஒரு கிலோவுக்கு ரூபாய் 150 முதல் 170 வரை உயர்ந்தது. உள்ளூர் வெங்காயத்தின் வழக்கமான வருகையால் ஜனவரி மாதத்திற்குப் பிறகு விலைகள் குறையத் தொடங்கின.

 

நுகர்வோரின் எதிர்ப்பை சமாளிக்க நடுவண் அரசு அக்டோபர் மாத இறுதியில் களத்தில் குதித்து, வெங்காயத்தை இறக்குமதி செய்யத் தொடங்குமாறு எம்.எம்.டி.சி -யிடம் கூறியது. ஆனால் ஜனவரி மாதம் வெங்காயம் நிறைந்த கொள்கலன்கள் இறக்கப்படுகையில், சந்தைகளில் உள்நாட்டு வருகை அதிகரித்தது. எம்எம்டிசி மற்றும் நாஃபெட் இடம் இதனால் நிறைய சரக்குகள் தேங்கி, அவற்றில் சில அழுகத் தொடங்கியுள்ளன.

பிசினஸ்லைன் நாஃபெட்டின் எம்.டி.யைத் தொடர்பு கொண்டபோது, அவரது அலுவலகம் ஒரு மின்னஞ்சல் பதிலில், எம்.எம்.டி.சி வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான நியமிக்கப்பட்ட நிறுவனம் என்பதால், அதை விவரங்களுக்கு அணுக வேண்டும் என்று கூறினார்.

 

பல முயற்சிகளுக்குப் பின்னும், வெங்காயத்தின் விற்பனை மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அளவு குறித்த கருத்துகளுக்கு எம்எம்டிசி உயர் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள இயலவில்லை.

 

Translated by Gayathri G