வருமான வரி மதிப்பீட்டாளர்கள் மார்ச் 31க்கு முன் தங்கள் நிரந்தர கணக்கு எண் (பான்-PAN) அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்காவிடில் ₹10,000 அபராதம் விதிக்கப்படும்.

முன்னதாக 2019 டிசம்பரில் பான்-ஐ ஆதார் உடன் இணைக்கும் தேதியை 2020 மார்ச் வரை நீட்டித்த வருமானவரித்துறை, இப்போது செயல்படாத பான் வைத்திருப்பதற்கான அபராதத்தை விதிக்கவிருக்கிறது.

இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் "செயல்படாதவை" என்று அறிவிக்கப்படும் என்று வருமான வரித் துறை கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.  இப்போது, வருமான வரிச் சட்டத்தின் கீழ் செயல்படாத பான் அட்டைதாரர்கள் மீது பான் இணைக்காததற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது என லைவ்மிண்ட் செய்தி குறிப்பிடுகிறது.

ஒரு பான்கார்டு செயல்படாதபோது, அது  குறிப்பிடப்படவில்லை என்று சட்டத்தால் கருதப்படுகிறது என்றும் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 272பி படி ₹10,000 அபராதம் விதிக்கப்படலாம் என்றும் பேங்க் பஜார் தலைமை நிர்வாக அதிகாரி ஆதில் ஷெட்டி லைவ்மிண்டிடம் தெரிவித்தார்.

பிரிவு 272பி படி: “ஒரு நபர், தனது நிரந்தர கணக்கு எண் (PAN number) அல்லது ஆதார் எண்ணை மேற்கோள் காட்ட வேண்டும், தவறினால்139ஏ பிரிவின் துணைப்பிரிவான (6ஏ)-வில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின் படி, அத்தகைய நபர் பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று மதிப்பீட்டு அதிகாரி உத்தரவிடலாம்.”

இருப்பினும், வங்கி கணக்கைத் திறப்பது அல்லது ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது போன்ற வரி அல்லாத நோக்கங்களுக்காக பான் கார்டை அடையாள ஆதாரமாகப் பயன்படுத்தற்க்கு கட்டணம் வசூலிக்கப்படாது. ஆனால், வங்கி பரிவர்த்தனைகள் வருமான வரியின் கீழ் வருவதால், செயல்படாத பான் பயன்படுத்தி வங்கிக் கணக்கு திறந்தால் சிக்கல்கள் ஏற்படலாம்.

பயனர்கள் தங்கள் PAN-ஐ ஆதார் உடன் இணைத்தவுடன், அவர்களின் பான் எண் செயல்படும், மேலும் இணைக்கும் தேதியிலிருந்து எந்த அபராதமும் பொருந்தாது.

செயல்படாத பான் கார்டுகள் வைத்திருப்பவர்கள் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. ஆதாருடன் இணைத்தாலே குறிப்பிட்ட பான் கார்டு செல்லுபடியாகும்.

உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆதார் திட்டம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று அறிவித்ததோடு, வருமான வரி தாக்கல் செய்வதற்கும், பான் ஒதுக்கீடு செய்வதற்கும் இது அவசியம் என்று கூறியதும் நினைவிருக்கலாம்.

Translated by Srikrishnan PC