பட்ஜெட் 2020 முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்தது - வங்கி வைப்புகளுக்கான காப்பீட்டுத் தொகையை முந்தைய ₹1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தியது (ஒரு வங்கியில் உள்ள அனைத்து வைப்புகளிலும்).

அண்மையில் ஒரு கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட வீழ்ச்சி வைப்புத்தொகையாளர்களின் மனதில் அச்சத்தைத் தூண்டியது. இந்நிலையில் இந்த காப்பீடு உயர்வு  ஆறுதலை கொடுத்துள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் இப்போது சிறு நிதி வங்கிகளில் (SFB- Small finance banks) நிலையான வைப்புகளை வைக்க பரிசீலிக்க முடியும், மேலும், அவை பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் ஒப்பிடுகையில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) SFB-க்களை விட அதிக விகிதங்களை வழங்கினாலும், வைப்புத்தொகை காப்பீட்டின் பற்றாக்குறை அவர்களை ஆபத்தான தேர்வாக ஆக்குகிறது.

தற்போது, தனியார் வங்கிகள் 1 முதல் 2 வருட காலத்திற்கு 6.2 முதல் 7.8 சதவீதம் வட்டியினை வைப்புத்தொகைக்கு வழங்குகின்றன.  SFB கள் தொடர்ந்து அதிக வட்டியினை வழங்குகின்றன.

ஜனா சிறு நிதி வங்கி மிக உயர்ந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது - 499 நாட்கள் (1 வருடம், 4 மாதங்கள் மற்றும் 13 நாட்கள்) வைப்புக்கு 8.5 சதவீதம்.  மூத்த குடிமக்கள் அதே காலத்திற்கு 9.1 சதவீதத்தை வட்டியாக பெறலாம்.

இவ்வங்கி ஒட்டுமொத்த மற்றும் கூட்டு வைப்புத்தொகைகளையும் வழங்குகிறது.  ஒட்டுமொத்த வைப்புத்தொகை விருப்பத்தின் கீழ், காலாண்டு வட்டியாக, ஒரு முதலீட்டாளரின் மகசூல் 499 நாள் வைப்புக்கு 8.78 சதவீதம் ஆகும் (மூத்த குடிமக்களுக்கு 9.42 சதவீதம்).

எப்படி விண்ணப்பிப்பது ?

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஜனா வங்கி 19 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது இவ்வங்கி 150 நகரங்களில் சுமார் 250 கிளைகளைக் கொண்டுள்ளது.

எந்தவொரு கிளையிலும் நீங்கள் ஒரு FD கணக்கை திறக்கலாம்.  இவ்வங்கியின் எந்தவொரு கிளையிலிருந்தும் 30 கி.மீ தூரத்திற்குள் நீங்கள் வசிப்பவராய் இருப்பின், கோரிக்கையின் பேரில், FD கணக்கை திறக்க அதன் பணியாளர்களை உங்கள் இல்லத்திற்கே அனுப்புகிறது ஜனா சிறு நிதி வங்கி.

நீங்கள் ஒரு அடையாள ஆதாரம் (ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை) மற்றும் உங்கள் பான் கார்டு ஆகியவற்றை வழங்க வேண்டும், நீங்கள் FD கணக்கை திறக்க விரும்பும் தொகைக்கான காசோலை உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்த பின்னர் பொதுவாக மூன்று அல்லது நான்கு நாட்களில் கணக்கு துவங்கப்படும்.  தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் புதிய வைப்புகளை உருவாக்கலாம்.

FD-களில் முதலீடு செய்வதற்கு முதலில் சேமிப்புக் கணக்கு உங்களுக்குத் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  இந்த சேமிப்புக் கணக்குகள் குறைந்தபட்ச இருப்புத் தேவையுடன் (minimum balance) வருகின்றன,  பராமரிக்கப்படாத கணக்குகள் சேவை கட்டணங்களை ஈர்க்கும்.

உங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச மாத சராசரி, ரூபாய் 2,500 ஐ நீங்கள் பராமரிக்க வேண்டும், இல்லையெனில் மாதத்திற்கு ₹20 (கூடுதலாக வரி) வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  உங்கள் FD  வைப்பு ₹25,000 ஐத் தாண்டினால் வங்கி உங்களுக்கு பூஜ்ஜியம் ரூபாய்  சேமிப்புக் கணக்கை வழங்குகிறது ஜனா சிறு நிதி வங்கி.

ஜனா சிறு நிதி வங்கி பற்றி…

ஜனா சிறு நிதி வங்கி (முன்னதாக ஜனலட்சுமி நிதி சேவைகள்)  மார்ச் 28, 2018 அன்று செயல்படத் தொடங்கியது.  இது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தனது ஒட்டுமொத்த இலாகாவில் 50 சதவீத பங்களிப்பை வழங்குகிறது (ஒரு ஆண்டு முன்பு நிலவரப்படி).

இந்த வங்கி தற்போது விவசாயம், வணிகம் மற்றும் வீட்டு மேம்பாட்டு கடன்களை வழங்குகிறது.  இது எதிர்காலத்தில் நுகர்வோர்  பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகன கடன் பிரிவுகளில் நுழைய திட்டமிட்டுள்ளது.

நிதியாண்டு 2019 நிலவரப்படி, வங்கியில், ரூபாய் 6,217 கோடிக்கு கடன் புத்தகம் இருந்தது, மொத்த மற்றும் நிகர செயல்படாத சொத்துக்கள் (NPA-Non performing assets) முறையே 8.41 மற்றும் 4.39 சதவீதமாக உள்ளது.

வரி

எஃப்.டி.களுக்கான வட்டி ‘பிற மூலங்களிலிருந்து வருமானம்’ (income from Other Sources)  என்ற அடிப்படையில் வரி விதிக்கப்படும்போது, மூத்த குடிமக்கள் தற்போதைய  வரி கொள்கையின் கீழ் ஆண்டுக்கு ₹50,000 வரை  (பிரிவு 80TTB இன் கீழ்) பெறும் வரி விலக்கு, புதிய வரி கொள்கையினை தேர்வுசெய்தால், 2020 ஏப்ரல் முதல் இந்த வரி விலக்கு கிடைக்காது.

Translated by Srikrishnan PC