தொலை தொடர்பு நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது ஊழியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தை மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள், அதாவது ஹோலி பண்டிகைக்கு முன், கொடுக்கும்.
முக்கியமாக இந்த மாதத்தில் கிடைக்கும் வருவாய் உள்ளிட்ட உள் வருவாயிலிருந்து (internal accruals), நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுக்கும்.
மேலும், மத்திய அரசிடமிருந்து பெறும் நிதி உதவி தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பிஎஸ்என்எல்-லின் 4 ஜி சேவைகளை தொடங்குவதற்கான திட்டங்கள் ஜூலை மாதத்திற்கு தள்ளப்படலாம்.
"பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடவடிக்கைகளின் (Operations) வருவாய் மிக அதிகமாக உள்ளது, ஏனெனில் வருடாந்திர பில்லிங் சுழற்சிகளைக் கொண்ட பல வாடிக்கையாளர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்துகிறார்கள். ஜனவரி மாதத்தில் உள் வசூல் (internal collections) சுமார் ரூபாய் 1,300 கோடியாக இருந்தது, அதே நேரத்தில் பிப்ரவரியில் ரூபாய் 1,800 கோடியாகவும், மார்ச் மாதத்தில் சுமார் ரூபாய் 2,000 கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று நம்பகத்தகுந்த வட்டாரங்கள் (sources) பிசினஸ்லைனிடம் தெரிவித்தது.
இந்த ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி ஹோலி பண்டிகை வருகிறது. "பிஎஸ்என்எல் ஜனவரி ஊதியத்தை மார்ச் 9 க்கு முன் மற்றும் பிப்ரவரி மாத ஊதியத்தை மார்ச் இறுதிக்குள் வரவு வைக்க விரும்புகிறது. எனினும், இதேபோன்று நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சம்பள பட்டுவாடாவை நெறிப்படுத்த முடியும் என்று அர்த்தமல்ல, ” என்று வட்டாரங்கள் கூறின.
பிஎஸ்என்எல்-லின் மாத சம்பள செலவினம் (ஈபிஎஃப் (EPF) செலுத்துதல்கள் உட்பட) சுமார் ரூபாய் 1,300 கோடி. இருப்பினும், வி.ஆர்.எஸ்ஸைத் தொடர்ந்து பிப்ரவரி முதல் இது பாதியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 ஜி வெளியீடு
பிஎஸ்என்எல் 4 ஜி சேவைகளை ஏப்ரல் 1ம் தேதி தொடங்க திட்டமிட்டு இருந்தது. ஆனால், மத்திய அரசிடமிருந்து பெறும் நிதி உதவி தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதன் 4ஜி சேவை திட்டத்தை ஜூலை மாதம் வரை தள்ளப்படக்கூடும, என்று வட்டாரங்கள் கூறின.
“பிஎஸ்என்எல்-லின் மறுமலர்ச்சி தொகுப்பில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தபடி ரூபாய் 15,000 கோடிக்கு இறையாண்மை (sovereign) பத்திரங்களை வழங்குவதில் தாமதம் உள்ளது. இதனால், விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் பணம் பட்டுவாடா மேலும் தாமதப்படுத்துகிறது. இதன் காரணமாக விற்பனையாளர்களும் புதிய உபகரணங்களை வழங்க தயங்குகிறார்கள், இது நிறுவனத்தின் மறுமலர்ச்சி திட்டங்களையும் பாதிக்கும்,” என்று வட்டாரங்கள் கூறின.
Translated by P Jaishankar