இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகள் தொடர்ந்து 2 நாட்களாக பங்குசந்தையில் 20% உச்சவரம்பை தொட்டுள்ளது. கடந்த திங்களன்று ரூ 74.3-லிருந்த இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகள் புதனன்று ரூ 104.6-ல் முடிவடைந்துள்ளது. இந்த ஏற்றத்திற்கு காரணம் பங்குசந்தையின் பெரும் முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களான ராதாகிஷன் ஷிவ்கிஷன் தமானி மற்றும் அவரது சகோதரர் கோபிகிஷன் தமானி தொடர்ந்து 2 நாட்களாக இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகளை பொதுவெளி சந்தையிலிருந்து (open market) வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ராதாகிஷன் தமானி புதன்கிழமையன்று 27.25 லட்சம் இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகளை சராசரியாக ரூ 104.16-ஐ ஒரு பங்கிற்கு கொடுத்து தேசிய பங்குச் சந்தை மூலம் வாங்கியுள்ளார். அவரது சகோதரர் கோபிகிஷன் தமானி 83.71 லட்சம் பங்குகளை (ரூ 98.42 ஒரு பங்குக்கு) தேசிய பங்குச் சந்தையிலும், 15.92 லட்சம் பங்குகளை (ரூ 98.59-க்கு) மும்பை பங்குச் சந்தையிலும் வாங்கியுள்ளார்.
அதேப்போல் செவ்வாய்க்கிழமையன்றும், 2.75% இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகளை பொது வெளியிலிருந்து (open market) வாங்கியுள்ளனர். இதன்மூலம் இந்த சகோதரர்களின் உரிமை இந்தியா சிமெண்டில் 11.58 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து வாங்கும் படலம் கடந்த ஆறு மாதங்களில் இந்த சகோதரர்கள், இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகளை வாங்கி குவித்துள்ளனர். முதன்முதலில், செப்டம்பர் காலாண்டில், 1.34% இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகளை வாங்கினர். தொடர்ந்து டிசம்பர் காலாண்டிலும் 3.43% பங்குகளை வாங்கி வைத்துள்ளனர். இதன்மூலம், இருவரும் இந்தியா சிமெண்ட்ஸில் அதீத நம்பிக்கை வைத்துள்ளனரென்று தெள்ளத்தெளிவாக அறிய முடிகிறது. இந்தியா சிமெண்ட்ஸ் கம்பெனி டிசம்பர் காலாண்டில் ரூ 5.37 கோடிகள் நஷ்டம் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.