கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, அடுத்த ஆண்டு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்விப் பயிலச் செல்வோர் எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதம் குறையக்கூடுமென்று வெளிநாட்டுக் கல்வி பற்றி ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 நோயாளிகள் இருப்பதால், மாணவர்கள், இந்தியாவில் மேல்ப்படிப்பைத் தொடர்வது அல்லது வேறு உபாயங்களை கையாள்வது குறித்து ஆலோசனையில் உள்ளனர். இருந்தும், தங்கள் பட்டப்படிப்பை வரும் இலையுதிர் காலத்தில் (செப்டம்பர் 2020) தொடர விரும்புவோர், குழப்பமான நிலையில் உள்ளனர்.

விசா கவலை

விசாவிற்கான விண்ணப்பங்களைப் பெற நடவடிக்கைகள் எடுப்பது, வைரஸைச் சுற்றி நிலவும் நிச்சயமற்ற தன்மை, பட்டப்படிப்பு முடிந்தபின் வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்குமா மற்றும் பயணத்தின் போது கட்டுப்பாடுகள் போன்ற கவலைகள் இப்போதே அவர்களைத் தொற்றிக்கொண்டுள்ளது.

"மாணவர்களின் முக்கியமான கவலைகளில் ஒன்று, அவர்களின் விசா நிராகரிப்பாகும்," என்று கல்லூரிகள் பற்றி ஆலோசனை தரும் யுனிரெலியின் இணை நிறுவனர் ஸ்ரீஷ்டி மிட்டல் கூறினார். இந்தியாவில் தூதரகங்கள் செயல்படாமல் இருப்பதினால், மாணவர்கள் தங்களது நேர்காணல்கள் எப்பொழுது தொடங்கி எப்போது விசா கிடைக்கும் என்ற கவலையில் உள்ளார்கள். மேலும், பல பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களை முற்றிலுமாக சில ஆண்டுகள் நிராகரிக்கக்கூடும் என்ற கவலையில் சிலர் இருப்பதாக, அவர் கூறினார்.

வெளியுறவு அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, ஜூலை 2019 நிலவரப்படி, கிட்டத்தட்ட 10.9 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் உயர்கல்வியைப் பயின்று வருகின்றனர். அவர்களுக்கான முதல் ஐந்து இலக்கு நாடுகள் (ஜூலை 2018 நிலவரப்படி) அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா , சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்.

செப்டம்பர் 2020-இல் படிப்பை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள், வீட்டுவசதி மற்றும் பகுதிநேர வேலைகள் கிடைக்குமா என்று ஆலோசனை செய்வதாக, வெளிநாட்டுக் கல்வி மற்றும் குடியேற்றம் பற்றி ஆலோசனை வழங்கும் நிறுவனமான டோரா வென்ச்சர்ஸ் நிர்வாக இயக்குநர் அகஸ்டின் பால் பெனெர்ஜி தெரிவித்தார்.

நிதி நெருக்கடி

அவர் மேலும் கூறுகையில், கீழ்மட்ட நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக தங்கள் சேமிப்பைச் செலவிடலாமா அல்லது கடன்களைப் பெறலாமா என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏனென்றால், லாக் டவுனுக்கு பிறகு வேலைகள் கிடைக்குமா என்பது நிச்சியமாகத் தெரியவில்லை.

தற்போது நிலவும் சூழ்நிலையில் வேலை வாய்ப்புகளும் குறைவாகவே இருப்பதால், வெளிநாட்டுக் கல்விக்கான கடன்களை வழங்குவதில் வங்கிகள் எச்சரிக்கையாக உள்ளன. குறிப்பாக முதுகலை பட்டப்படிப்பில், வாழ்வின் வளர்ச்சிக்கான தொழில் பற்றி ஆலோசனை வழங்கும் iDreamCareer.com இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆயுஷ் பன்சால் கூறினார்.

தற்போது நிலவும் சூழ்நிலையிலிருந்து மாணவர்கள் மீள்வதற்கு, ஒரு சில பல்கலைக்கழகங்கள் நிதியுதவி தேவைப்படுபவர்களுக்கு விண்ணப்பக் கட்டணங்களில் தள்ளுபடியை அறிமுகப்படுத்தியுள்ளன. சில பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகத்தைத் திறப்பதை ஒத்திவைக்கவோ, செமஸ்டர்களை ஒத்திவைக்கவோ அல்லது ஆன்லைனில் வகுப்புகளை நடத்தவோ திட்டமிட்டுள்ளன.

ஆன்லைன் அச்சம்

ஆன்லைன் வகுப்புகள் தாங்கள் செலவழிக்கும் பணத்திற்கு மதிப்புள்ளதா என்ற கவலையும் அவை எந்த அளவிற்குப் பயன் தரும் என்று மாணவர்கள் அக்கறை கொள்கிறார்கள் என்று டோரா வென்ச்சர்ஸ் பெனெர்ஜி கூறினார்.

“தற்போது சுற்றி வரும் ஒரு சொல் என்னவென்றால்,“ யாரும் ‘ஜூம் பல்கலைக்கழகத்திற்கு’ (வேகமாகச் செயல்படும் பல்கலைக்கழகம்) செல்ல விரும்பவில்லை, ”என்று யுனிரீலியின் மிட்டல் கூறினார்.

மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பு காலத்தை ஒத்திவைப்பதன் மூலம் ஏற்படும் நீண்டகால விளைவு குறித்தும் கவலையில் உள்ளனர். "அவர்கள் பட்டப்படிப்பு தேதி அதன்பின் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் பற்றிய விவரங்களையும் அவர்கள் தேடுகிறார்கள்."

தற்போது வெளிநாட்டில் படித்து கொண்டியிருக்கும் மாணவர்கள் நிலைமை இன்னும் மோசமானது. எல்லா பல்கலைக்கழகங்களும் ஆன்லைனில் விரிவுரைகளை வழங்கவோ அல்லது தேர்வுகளைத் திறம்பட நடத்தவோ முடியாது, எனவே மாணவர்கள் தவறவிட்ட செமஸ்டர்கள் குறித்தும் அக்கறை கொள்கின்றனர். கோவிட்-19, அவர்களின் வேலை வாய்ப்புகளில் தாக்கத்தை வேறு ஏற்படுத்தியுள்ளது. பல துறைகளில் ஒவ்வொரு நாளும் பணிநீக்கங்கள் அதிகரிப்பதால், வேலைக்கு விண்ணப்பிக்கும்போது புலம்பெயர்ந்தோர் அதிக பாகுபாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மாணவர்கள் கவலைப்படுகிறார்கள்.

"வாழ்க்கை செலவினங்கள் மிகப்பெரிய அளவில் அவர்களுக்கு அதிகரித்துள்ளது" என்று பன்சால் கூறினார். பல பல்கலைக்கழகங்கள் விடுதிகளை மூடிவிட்டதால், குறிப்பாக இந்தியாவுக்கு திரும்ப முடியாதவர்கள், தங்குமிடங்களை வெளியே தேட வேண்டியிருக்கிறது, என்றும் அவர் மேலும் கூறினார்.

Translated by P Ravindran